மனதில் ஆழமாகப் பதிந்த ஒரு கனவு
1886, செப் 29இல் ஒரு கனவு கண்டேன். பெரி பழங்களைத் தேடிச்சென்ற ஒரு பெருங்கூட்டத்தோடு நானும் சென்றேன். அந்தப் பழங்களைப் பறிப்பதற்கு உதவி செய்ய அநேக வாலிப ஆண்களும் பெண்களும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். ஒரு நகரத்தில் இருப்பது போலத் தெரிந்தது, காலியிடங்களே அதிகம் இல்லை. ஆனால், நகரத்தைச் சுற்றிலும் திறந்த வெளிகளும், அழகான தோப்புகளும், பண்படுத்தப்பட்ட தோட்டங்களும் இருந்தன. எங்களுடைய கூட்டத்திற்குத் தேவையான பொருட்களை ஏற்றிச் சென்ற ஒரு பெரிய வண்டியும் எங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருந்தது. TamChS 65.3
திடீரென அந்த வண்டி நின்றது. கூட்டத்தினர் கலைந்து ஒவ்வொரு திசையிலும் பழங்களைத் தேடிச் சென்றார்கள். வண்டியைச் சுற்றிலும் உயரமும் குட்டையுமான புதர்கள் இருந்தன; அவற்றில் பெரிய, அழகான கருப்பு பெரி பழங்கள் தொங்கின. ஆனால், அந்தக் கூட்டத்தினர் அவற்றைப் பார்க்காமல், எங்கோ தூரத்தில் பார்த்தார்கள். பக்கத்தில் உள்ள பழங்களைப்பறிக்க ஆரம்பித்தேன். பச்சை பெரிகளைப் பறித்துவிடக் கூடாதெனப் பயந்து மிகக்கவனமாகப்பறித்தேன். ஏனென்றால், பழுத்த பழங்களுடன் காய்களும் இருந்ததால், ஒவ்வொரு கொத்திலும் ஒன்றிரண்டு பழங்களே பறிக்கக்கூடிய நிலையில் இருந்தன.TamChS 66.1
பெரிய அளவில் இருந்த அருமையான பழங்கள் சில தரையில் விழுந்து, பாதியளவு புழுக்களாலும் பூச்சிகளாலும் கடிக்கப் பட்டிருந்தன. ‘ஓ, கொஞ்ச நாட்களுக்கு முன்பு வந்திருந்தால், அருமையான இந்தப் பழங்களை எல்லாம் பறித்திருக்கலாம்! இப்போது காலம் பிந்திவிட்டது. ஆனாலும் இவற்றைத் தரையிலிருந்து பொறுக்கி, ஏதாவது நல்ல நிலையில் இருக்கிறாதாவென்று பார்ப்பேன். முழுப்பழமும் கெட்டிருந்தாலும் கூட, சகோதரர்களிடம் காண்பித்து, அவர்கள் பிந்திவராமல் இருந்திருந்தால் அந்தப்பழங்களைப் பறித்திருக்கலாம் என்றாவது சொல்லலாம்.’TamChS 66.2
அங்குமிங்குமாக நடந்துவிட்டு, அந்தக் கூட்டத்தாரில் ஒன்றிரண்டு பேர் நான் இருந்த இடத்திற்கு வந்திருந்தார்கள். தாங்கள் ஒருவருக்கொருவர் அருகிலிருந்து, ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருப்பதே போதுமென்பது போலக் காணப்பட்டார்கள். என்னைப்பார்த்ததும், எல்லாப் பக்கமும் தேடினோம், ஒரு பழம் கூட இல்லை” என்றார்கள். நான் வைத்திருந்த பழங்களைப்பார்த்ததும் திகைத்துப்போனார்கள். ‘இந்தப் புதர்களிலேயே அதிகம் பறிக்கலாம்” என்று அவர்களிடம் கூறினேன். பறிக்க ஆரம்பித்த வேகத்திலேயே நிறுத்திவிட்டு, ‘இங்கு நாங்கள் பறிப்பது சரியல்ல. இந்த இடத்தை நீங்கள்தாம் கண்டுபிடித்தீர்கள்; இந்தப்பழங் கள் உங்களுக்குரியவை” என்று சொன்னார்கள். உடனே நான், “அதனால் என்ன, எங்குப் பழத்தைப் பார்க்கிறீர்களோ அங்கு நீங்கள் பறிக்கலாம். இது கடவுளுடைய களம். இவை அவருடைய பழங்கள். அவற்றைப் பறிப்பது உங்களுக்குரிய சிலாக்கியம்” என்று சொன்னேன்.TamChS 66.3
மீண்டும் தனியாகத்தான் நின்றுகொண்டிருந்தேன். அவ்வப் போது வண்டியின் அருகே சிலர் பேசுவதும் சிரிப்பதும் கேட்கும். உடனே அங்கிருப்பவர்களிடம், “அங்கே என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்பேன். ஒரு பெரி பழங்கள்கூட இல்லை. எங்களுக்கு களைப்பாகவும் பசியாகவும் இருக்கிறது. அதனால்தான் மதிய உணவு சாப்பிடுவதற்காக வண்டியின் பக்கம் வந்தோம். கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு பிறகு செல்வோம்” என்று சொன்னார்கள்.TamChS 66.4
“ஆனால் நீங்கள் ஒன்றுமே இதுவரை கொண்டுவரவில்லை. எங்களுக்கு எதுவுமே கொடுக்காமல் எங்களுடைய பொருட்களை எல்லாம் காலிசெய்கிறீர்கள். நான் இப்போது சாப்பிட முடியாது; இன்னும் ஏராளமான பழங்களைப் பறிக்கவேண்டியுள்ளது. நீங்கள் கவனமாகத் தேடாததால்தான் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. புதர்களுக்கு வெளியே அவை தொங்காது. நீங்கள்தாம் அவற்றைத் தேடவேண்டும். கைநிறைய பறிக்கமுடியாது என்பது உண்மைதான். ஆனால் பச்சை பெரிகளுக்குள்ளே கவனமாகத் தேடினால், அருமையான பழங்களைக் கண்டுபிடிக்கலாம்” என்று சொன்னேன்.TamChS 67.1
பெரி பழங்களைப் போட்டுவந்த என்னுடைய சிறிய பை சீக்கிரமே நிறைந்துவிட்டது, அவற்றை வண்டிக்கு எடுத்துச் சென்றேன். உடனே நான், “நான் பறித்ததிலேயே அருமையான பழங்கள் இவை. நான் அருகிலேயே இவற்றைப் பறித்தேன், நீங்களோ தூரத்தில் தேடியும் எதுவும் கண்டுபிடிக்கவில்லை” என்று சொன்னேன்.TamChS 67.2
உடனே எல்லாரும் வந்து என்னுடைய பழங்களைப்பார்த்தார்கள். பார்த்ததும் ‘ இவை உயரமான செடிகளிலிருந்து பறிக்கப்பட்ட அருமையான, பாதிக்கப்படாத பெரிகள். பெரிய செடிகளில் பெரிகள் இருக்காதென நினைத்தோம். அதனால்தான் சிறிய செடிகளில் தேடிப்பார்த்தோம். ஆனால் ஒரு சில பெரிகளையே பறிக்க முடிந்தது” என்று சொன்னார்கள்.TamChS 67.3
உடனே நான்,“இந்தப் பெரி பழங்களைக் கவனித்துக்கொள்வீர்களா? நான் போய் உயரமான செடிகளில் பார்க்கிறேன்” என்று சொன்னேன். ஆனால், பழங்களைப் பாதுகாக்க அவர்கள் எந்த ஆயத்தமும் செய்யவில்லை. ஏராளமான பாத்திரங்களும் சாக்குகளும் இருந்தன; ஆனால், உணவுகளை வைக்கவே அவற்றைப் பயன்படுத்தினார்கள். காத்திருந்து எனக்குக் களைத்துவிட்டது. இறுதியாக நான்,“பழம்பறிக்க வரவில்லையா? இல்லையென்றால், பழங்களைப் பாதுகாக்க நீங்கள் ஏதாவது செய்யலாமே?” என்று கேட்டேன்.TamChS 67.4
ஒரு சகோதரி, “சகோதரி ஒய்ட் அவர்களே, அநேக வீடுகளும், பரபரப்பும் நிறைந்த இடத்தில் ஏதாவது பழம் இருக்குமென உண்மையிலேயே நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், பழம் பறிக்க நீங்கள் மிகுந்த ஆர்வத்தோடு காணப்பட்டதால் உங்களோடு வருவதற்குத் தீர்மானித்தோம். பழம்பறிக்க முடியாவிட்டாலும், சாப்பிட்டு, புத்துணர்வு போதுமான உணவுப்பொருட்களை எடுத்து வரவேண்டுமென நினைத்தோம்” என்று சொன்னார்.TamChS 68.1
உடனே நான், “இது என்ன வகையான பணியென்று எனக்குத் தெரியவில்லை . நான் உடனே அந்தப் புதர்களிடம் செல்கிறேன். ஏற்கனவே இன்று பொழுது போய்விட்டது, சீக்கிரம் இருட்டிவிடும், அதன்பிறகு பழங்களைப் பறிக்கமுடியாது” என்று சொன்னேன். சிலர் என்னோடு வந்தார்கள். மற்றவர்கள் சாப்பிடுவதற்காக வண்டியின் அருகிலேயே உட்கார்ந்தார்கள்.TamChS 68.2
ஓர் இடத்தில் ஒரு சிலர் கூடி, மிகுந்த ஆர்வத்தோடு எதைப் பற்றியோ பேசிக்கொண்டிருந்தார்கள். நான் பக்கத்தில் சென்றேன். ஒரு பெண்ணின் கரங்களில் இருந்த ஒரு சிறுபிள்ளையைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ‘இன்னும் கொஞ்சம் நேரம்தான் இருக்கிறது. நேரம் இருக்கும்போது வேலை செய்வதுதானே நல்லது” என்று சொன்னேன்.TamChS 68.3
ஒரு வாலிபப் பெண்ணும், வாலிபப் பையனும் வண்டியை நோக்கி ஓட்டப்பந்தயம் வைத்திருந்தார்கள். அநேகருடைய கவனம் அதில்தான் இருந்தது. ஓடி வண்டிப் பக்கம் சென்றதும், மிகவும் களைத்துப்போய், உட்கார்ந்து, ஓய்வெடுக்க ஆரம்பித்தார்கள். மற்றவர்களும் ஓய்வெடுக்கும்படி புல்தரையில் படுத்தார்கள்.TamChS 68.4
அவ்வாறு அந்த நாள் கழிந்தது. வேலையே நடைபெறவில்லை. கடைசியாக நான், “சகோதரரே, தோல்வியான முயற்சி என்று சொல்கிறீர்கள். இப்படித்தான் வேலை செய்வீர்கள் என றால், உங்களுக்கு வெற்றி கிடைக்காததில் எனக்கு ஆச்சரியமே இல்லை. வேலையை எவ்வாறு செய்கிறீர்கள் என்பதை பொறுத்து தான் உங்கள் வெற்றியோ தோல்வியோ அமைகிறது. இங்கே பெரி பழங்கள் இருக்கின்றன; நான் பறித்தேன். சிலர் குட்டையான செடிகளில் தேடி, அவற்றைக் கண்டுபிடிக்கவில்லை; உயரமான செடிகளில் தேடவில்லை; ஏனென்றால், அவற்றில் பழங்கள் இருக்கா தென நினைத்தீர்கள். நன்றாகப் பழுத்த, பெரிய பழங்களை நான் பறித்திருப்பதை நீங்கள் பார்க்கலாம். கொஞ்ச நாட்களில் மற்ற பெரிக்களும் பழுத்துவிடும். மீண்டும் இங்கு வந்து பறிக்கலாம். இவ்வாறுதான் பழங்களைப் பறிக்க வேண்டுமென என்னிடம் சொல்லப்பட்டது. வண்டியின் அருகிலேயே தேடியிருந்தால், என்னைப் போல நீங்களும் பழங்களைப் பறித்திருக்கலாம்.TamChS 68.5
“இப்படிப்பட்ட வேலையை எவ்வாறு செய்ய வேண்டுமென கற்றுக்கொள்கிறவர்களுக்கு இன்று நீங்கள் என்ன பாடத்தைக் காட்டினீர்களோ அதைத்தான் கற்றுக்கொள்வார்கள். வீடுகள் நிறைந்த இந்த இடங்களில்தான் பழங்கள் நிறைந்த இந்தப் புதர்களை தேவன் வைத்திருக்கிறார். அவற்றை நீங்கள் தேடிக் கண்டுபிடிக்க விரும்புகிறார். ஆனால் சாப்பிடுவதிலும், வேடிக்கையாக நேரம் போக்குவதிலுமே நேரத்தை எல்லாம் செலவிட்டீர்கள். பழங்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்கிற ஆர்வமிக்க உறுதியுடன் நீங்கள் வரவில்லை.TamChS 69.1
இதுமுதல் அதிக வைராக்கியத்தோடும், ஊக்கத்தோடும், வித்தியாசமான கண்ணோட்டத்தோடும் நீங்கள் வேலைசெய்ய வேண்டும். இல்லையென்றால், உங்களுடைய வேலையால் பயனில்லை. சரியான விதத்தில் வேலைசெய்தால், சாப்பிடுவதும் மகிழ்ச்சியாக நேரம் கழிப்பதும் முக்கியமே அல்லவென்கிற பாடத்தை இளம் ஊழியர்களுக்குக் கற்றுக்கொடுப்பீர்கள். இந்த இடத்திற்கு வண்டியைக் கொண்டுவருவது கடினமான வேலை என்பதைக் கண்டீர்கள். ஆனால் அதில் பொருட்களை எடுத்துவர நினைத்தீர்களே தவிர, கடினமாக வேலைசெய்து, பழங்களைப் பறித்து, அதில் எடுத்துச் செல்ல நினைக்கவில்லை. முதலில் உங்களுக்கு அருகில் உள்ள பழங்களைப் பறிக்க கவனமாக இருக்கவேண்டும். பிறகு தூர இடத்தில் இருப்பதைத் தேடிச் செல்லவேண்டும். அதன்பிறகு மீண்டும் பக்கத்தில் வந்து தேடிப்பார்க்கலாம். இவ்வாறு நீங்கள் வெற்றி பெற முடியும்” என்று சொன்னேன். TamChS 69.2